முடிந்தால் ஜனாதிபதித் தேர்தலை நடத்துங்கள்’: சஜித் பிரேமதாஸ சவால்!
முட்டாள்தனமான அரசாங்கம் நாட்டை அழித்து வருகிறது. தேர்தல் இல்லாமல் முன்னேற்றமொன்று இல்லை. அரசாங்கம் தேர்தலை நடத்தாவிட்டால் வீதியில் இறங்கி அதற்காக போராடுவோம்’ என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் உடுதும்பர தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ‘அமைதியான போராட்டங்களைக் கண்டும் அரசாங்கம் அச்சமடைந்துள்ளது. காலி முகத்திடல் வளாகத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நேற்று முன்தினம் அடக்குமுறை மேற்கொள்ளப்பட்டதும் இதன் பிரகாரமே. தாயும் மகனும் கைகோர்த்து நடத்தும் அமைதியான ஆர்ப்பாட்டத்தைக்கூட அரசாங்கத்தால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
மகனிடமிருந்து தாயைப் பறித்துச் சென்று ஜீப்பில் ஏற்றிச் செல்லும் காட்சிகளைக்கூட பார்க்கக்கிடைத்தது. அத்துடன், அரச பயங்கரவாதத்திற்கும் அரச வன்முறைக்கும் நீண்ட கால ஆயுள் இல்லை. இதற்கு வரலாற்றில் பல படிப்பினைகள் உள்ளன. இந்த அரசாங்கம் தேர்தலுக்கு முற்றாக அஞ்சுகிறது. தேர்தலை பிற்போடவே முயற்சிக்கிறது. உடனடியாக தேர்தலொன்றை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுகிறோம். முடிந்தால் ஜனாதிபதி தேர்தலையும் நடத்துங்கள்’ என சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.