ஈழத்தமிழர் விவகாரத்தைக் கையிலெடுக்க வேண்டிய இந்தியா

ஈழத்தமிழர் விவகாரத்தைக் கையிலெடுக்க வேண்டிய இந்தியா

வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் இருக்கும் உள்ளக முரண்பாடுகளை ஊக்குவித்துப் பிளவுபடுத்தும் உத்திகளையும், இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு அமைவாகப் 13 ஐ ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் எனத் தமிழ்த் தரப்புக்கு நடத்தும் கட்டாய வகுப்புகளையும் புதுடில்லி நிறுத்த வேண்டிய நேரமிது

உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரசிய பொது வாக்கெடுப்பின் மூலம், இணைத்துக் கொண்டமை தொடர்பாக இந்தியப் பேரரசுக்குப் பெரும் இராஜதந்திரச் சோதனை ஏற்பட்டுள்ளது.

புதுடில்லி தனது நிலைப்பாட்டை விரைவில் விளக்குவோமென இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளதாக ரூதமிழ் (totamil) என்ற இந்திய செய்தி இணையத்தளம் தெரிவித்துள்ளது.

ரசிய – இந்திய உறவு

இந்த வாக்கெடுப்பை ஐக்கிய நாடுகள் சபையும் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளும் பகிரங்கமாகக் கண்டிதுள்ள நிலையில், இந்தியா தொடர்ந்தும் அமைதி காத்து வருகின்றது. ரசிய – இந்திய உறவே இதற்குக் காரணம்.

உக்ரைன் நெருக்கடியால் உருவாகி வரும் சர்வதேசச் சூழல் இந்தியாவுக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது. வரலாற்று ரீதியாக உக்ரைன் விடயத்தில் இந்தியா ரசியாவுடன் இருந்துள்ளது, 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உக்ரைனின் க்ரைமியா பிரதேசத்தை ரசியா தன்னுடன் இணைத்துக் கொண்டபோதும், இந்தியா அது குறித்து மௌனமாகவே இருந்தது.

எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை. அதேபோன்று கடந்த மாதம் உக்ரைனின் நான்கு பிராந்தியங்களைப் பொது வாக்கெடுப்பின் மூலம் ரசியாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்ட விவகாரத்திலும், இந்தியாவின் மௌனம் பல கேள்விகளை எழுப்பியுள்ளன. இலங்கை விவகாரத்தில் குறிப்பாக ஈழத்தமிழர்களின் விவகாரத்திலும் இந்தியா 1983 இல் இருந்து சரியான நிலைப்பாட்டை எடுத்திருக்கவில்லை.

1983 இல் இருந்து இந்தியா அமெரிக்காவுடன் நட்பைப் பேண ஆரம்பித்தமைகூட இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்கில் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டமே காரணமாகியது என்பது அனைவருக்கும் தெரிந்த கதை. இப் பின்னணியிலேதான் இன்றுவரை கூட ஈழத்தமிழர் விவகாரத்தில் மதில் மேல் பூனை போன்ற இராஜதந்திரத்தையும், சிங்கள ஆட்சியாளர்களுடன் விட்டுக் கொடுத்துச் செல்லுகின்ற காய் நகர்த்தல்களையும் இந்தியா கையாளுகின்றது என்பது பட்டவர்த்தனம்.

வியாழக்கிழமை ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இந்தியா வாக்களிக்காது விலகிச் சென்றுள்ளது. 2012 இல் இருந்து இந்த அணுகுமுறையைத்தான் இந்தியா ஜெனீவாவில் கடைப்பிடித்து வருகின்றது. ஆனாலும் இந்த ஆண்டு அது வெளிப்படையாகவே தெரிந்தது.

முரண்பாட்டில் ஓர் உடன்பாடு

அரசியல் தீர்வைப் பற்றி ஜெனிவாவில் இந்தியப் பிரதிநிதி பேசியிருந்தார். ஆனால் அமெரிக்காவோ அல்லது இலங்கை விவகாரத்தைக் கையாளும் பிரித்தானியா தலைமையிலான கருக்குழு நாடுகளோ அரசியல் தீர்வைப் பற்றிப் பேசவில்லை. இந்தியா மாத்திரமே பேசியிந்தது. ஆனால் இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் 13 ஆவது திருத்தத்தை அடைப்படையாகக் கொண்டே இந்தியா அரசியல் தீர்வு பற்றிய பேச்சை முன்னெடுத்தது.

இந்த நிலையில் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்காமல் இந்தியா விலகியமை ஈழத்தமிழர் நோக்கில் நின்றல்ல. ஆனால் இலங்கை விவகாரத்திலும் ஈழத்தமிழர் விடயத்திலும் இந்தியா கையாளும் இந்த அணுகுமுறை அமெரிக்காவுக்குச் சிக்கலானதல்ல. அதேபோன்றுதான் ரசியா – உக்ரைனில் மேற்கொள்ளும் இராணுவ மற்றும் அரசியல் விவகாரத்திலும் இந்தியா அமைதிகாப்பது அமெரிக்காவுக்குப் பெரியளவில் சிக்கலாக இல்லை.

முரண்பாட்டில் ஓர் உடன்பாடு என்ற கொள்கையின் படி இந்தியா அமெரிக்காவுடன் அரசியல் ரீதியான காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றது என்பது கடந்த காலப் பட்டறிவு. 2014 இல் இருந்து உக்ரைனின் மீது ரசியா மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து இந்தியா தெரிவித்த கருத்துக்கள் ரசியாவுக்கு ஆதரவாகவே இருந்தன. உக்ரைனில் ரசியா பொது வாக்கெடுப்பு நடத்திய விடயத்தில் அனைத்து தரப்பினரும் நிதானத்துடன் செயல்பட வேண்டுமென புதுடில்லி கருதுவதாக இந்திய ஆங்கில ஊடகங்களை அவதானிக்கும்போது புரிகிறது.

ஆனால் 2014 இல் க்ரைமியாவை ரசியா தன்னுடன் இணைத்துக் கொண்ட வேளை பிரதமராக இருந்த மன்மோகன் சிங், அப்போது இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த சிவசங்கர் மேனன், ஆகிய இருவரும், க்ரைமியா மீது ரசியாவுக்கு முற்றிலும் நியாயமான அக்கறை இருப்பதாகப் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டியிருந்தனர். அதாவது க்ரைமியாவை ரசியா பலாத்காரமாக இணைத்துக் கொண்டதை இந்தியா எதிர்க்கவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. இந்தியாவின் ஆதரவுக்கு ரசிய அதிபர் புடின் அப்போது நன்றியும் தெரிவித்திருந்தார்.

க்ரைமியாவில் ரசியாவின் நடவடிக்கைக்கு முக்கிய ஆதரவு வழங்கிய சீனாவுக்கு நன்றி கூறுவதாகவும், இந்தியாவின் நிதானம் மற்றும் பக்கச்சார்பற்ற தன்மையை ரசியா பெரிதும் மதிப்பதாகவும் அப்போது புட்டின் பகிரங்கமாகக் கூறியிருந்தார். ஆனால் 2020 ஆம் ஆண்டு ஏப்ரலில் கிழக்கு லடாக்கில் மெய்யான கட்டுப்பாட்டு எல்லையின் நிலைமையை சீனா மாற்ற முற்பட்டபோது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அந்தவேளை அமெரிக்கா இந்தியாவின் பக்கம் நின்றது. ரசியா அமைதியாக இருந்தது. ஆனால் இன்றுவரைகூட 2020 இற்கு முன்னரான மெய்யான கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியை இந்தியா சீனாவிடம் இருந்து மீட்கவேயில்லை. சென்ற வியாழக்கிழமை கூட லடாக்கில் பதற்றம் ஏற்பட்டிருந்தது.

நடுநிலை என்ற போர்வையில் இந்தியா

லடாக் எல்லைப் பகுதியில் சீன ஆக்கிரமிப்பு விவகாரத்தில் அமெரிக்கா மாத்திரமல்ல ஐரோப்பிய நாடுகள்கூட இந்தியாவுக்கு ஆதரவாகவே இருந்தன. இந்த நிலையில் ரசிய – உக்ரைன் போரில் இந்தியா யாருடைய பக்கமும் நிற்காமல், நடுநிலை என்ற போர்வையில் அமைதிகாப்பது இந்திய இராஜதந்திரத்தின் பலவீனமாகவே கருதப்படுகின்றது. ரசியா மீதான இந்திய இராஜதந்திர நிலைப்பாடு ஆச்சரியத்தை அளிக்கவில்லை என தி வில்சன் மையத்தின் தெற்காசிய அசோசியேட் மற்றும் ஆசிய திட்டத்தின் துணை இயக்குனரான மைக்கேல் காகல்மேன் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

க்ரைமியா குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்மொழிவு வந்தபோது, இந்தியா வாக்களிக்காமல் விலகி இருந்தது. இந்தியாவின் நிலைப்பாடு அப்படியே உள்ளது. இதை அமெரிக்கா அரைமனதுடன் ஏற்றுக்கொள்கிறது என்பதை அறிய முடிவதாக மைக்கேல் காகல்மேன் தனது கடந்த பெப்ரவரி மாத பதிவில் குறிப்பிட்டிருந்தார். 2014 இல் க்ரைமியாவை ரசியா தன்னுடன் இணைத்துக் கொண்டபோது, இந்தியா மௌனத்தை வெளிபடுத்தியது.

பேச வேண்டிய சந்தர்ப்பங்களில் குறைவாகவே இந்தியா கருத்திட்டது என்பதையே மைக்கேல் காகல்மேனின் பதிவில் இருந்து அறிய முடிகின்றது. அதேநேரம் ரசிய உக்ரெய்ன் போர் ஆரம்பித்த பின்னரான அரசியல் சூழலில், ரசியா குறித்து இந்தியா வெளிப்படையாகக் கண்டிக்காதுவிட்டாலும், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு 2014 இல் இருந்ததைவிடவும் தற்போது வலுப்பெற்றுள்ளதையே அவதானிக்க முடிகின்றது. ரசியா உக்ரெய்னின் பிரதான நான்கு பிராந்தியங்களில் பொதுவாக்கெடுப்பு நடத்திய பின்னரான சூழலிலும், இந்தியா ஊமைப் பார்வையாளராக இருப்பது புதுடில்லியின் புவிசார் அரசியல் போக்குகளுக்கு எதிர்காலத்திலும் சாதகமான விளைவுகளைத் தரும் என்று எதிர்ப்பார்க்கவும் முடியாது. ஆகவே இந்தியா விரைந்து முடிவெடுக்க வேண்டிய காலம் இது.

இந்தோ – பசுபிக் பாதுகாப்பு விவகாரங்களில் தனது கவனத்தைக் குறைத்து வட இந்திய எல்லைப் பகுதிகளில் தனது பாதுகாப்புக் கவனத்தைக் குவித்துள்ள இந்தியா அமெரிக்காவுடன் தொடர்ந்தும் உறவைப் பேணி வந்தாலும், ரசிய ஆதரவு விவகாரம் நீண்டகாலத்துக்கு அமெரிக்காவைப் பொறுமை காக்க வைக்குமா என்பது கேள்வி. இப் பின்புலத்தில் உக்ரெய்னின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய நான்கு பிராந்தியங்களைத் தனது நாட்டுடன் இணைத்துக் கொள்ளத் தீர்மானித்துள்ள ரசியா, எதிர்ப்புகளையும் கடந்து அந்தப் பகுதிகளைத் தனது நாட்டுடன் இணைத்து ரசிய எல்லையை மேலும் விரிவுபடுத்தும் என்பது கண்கூடு. ஏனெனில் க்ரைமியாவை இணைத்தபோது எதிர்ப்புக்களை மீறி அதனை உறுதிப்படுத்திய ரசியா, உக்ரெயனின் மேற்படி நான்கு பிராந்தியங்களையும் தனது நாட்டுக்குரியதாக உறுதிப்படுத்தக்கூடிய அளவுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் தனக்குரிய வீட்டோ அதிகாரத்தை இறுதிய ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடிய நிலை வரலாம்.

ஈழத்தமிழர் விவகாரம்

இப் பின்னணியிலேதான் ஈழத்தமிழர் விவகாரத்தை இந்தியா கையிலெடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனை இந்தியா புரிந்து கொண்டாலும், மாறி வரும் புதிய உலக அரசியல் ஒழுங்கு மாற்றத்துக்கு ஏற்ப ஈழத்தமிழர் விவகாரத்தை கையில் எடுக்க வேண்டும் என்ற கருத்தியலை புதுடில்லி ஏற்கக்கூடிய மன நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை. சீன – ரசிய உறவு என்பது இனி வரவுள்ள உலக அரசியல் ஒழுங்கு மாற்றத்தில் தாக்கத்தைச் செலுத்தக்கூடியதாகவே இருக்கும். ஆகவே சிங்கள ஆட்சியாளர்களின் விருப்பங்களை நிறைவேற்றினால் இந்தோ – பசுபிக் விவகாரத்தைக் கையாளலாம் என்று புதுடில்லி ஆழமாக நம்புகின்றது.

இதன் காரணமாகவே ஈழத்தமிழர்களுக்குச் சாதகமான அல்லது அவர்கள் கோருகின்ற அரசியல் தீர்வு பற்றிய விவகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், இலங்கை பக்கம் நிற்கின்ற அணுகுமுறையை இந்தியா விரும்புகின்றது. அதேநேரம் அமெரிக்க ஆதரவு இந்தியாவுக்கு இருந்தாலும். எதிர்காலத்தில் ரசிய விவகாரத்தில் வெளிப்படைத் தன்மையான அரசியல் நகர்வுகளை இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா எதிர்பார்க்கும் சூழல் உருவாகலாம். ஏனெனில் இலங்கையைப் பொறுத்தவரை எப்போதுமே சீனச் சார்பும், அமெரிக்காவுடனான உறவை இந்தியாவைக் கடந்து நேரடியாக மேற்கொள்ள வேண்டும் என்ற விருப்பமும் நீண்டு கொண்டே வருகிறது.

குறிப்பாகச் சிங்கள ஆட்சியாளர்கள் 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், இலங்கையில் இந்திய முதலீடுகளை விடவும் சீன முதலீடுகளையே விரும்புகின்றனர். இந்திய முதலீடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அளவுக்குச் சீன முதலீடுகளுக்குரிய எதிர்ப்புகளை, பௌத்த குருமாரும் சிங்கள அமைப்புகளும் மேற்கொள்ளவேயில்லை. ஆகவேதான் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கையை நேர்மையாக அணுக வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு உரியது. அதற்காக 13 தீர்வல்ல. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரமும் ஈழத்தமிழர் விவகாரத்தைக் கையாளவும் முடியாது.

ஆகவே 1983 இல் ஈழப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது அணிசேராக் கொள்கையக் கைவிட்டு அமெரிக்காவுடன் முரண்பாட்டில் உடன்பாடான இராஜதந்திர நகர்வை ஆரம்பித்த இந்திரா காந்தியின் கொள்கையைச் சமகால புவிசார் அரசியல்- புவிசார் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்பக் கொஞ்சம் மேலே சென்று அசைக்க வேண்டிய காலச் சூழல் புதுடில்லிக்கு. சிங்கள ஆட்சியாளர்களை மாத்திரம் கையாண்டால் போதுமென்ற புதுடில்லியின் ஆழமான விருப்பம் கொண்ட கருத்தியல், மாறிக் கொண்டிருக்கும் புதிய உலக அரசியல் ஒழுங்குக்கு ஏற்ப இனிமேலும் செல்லுபடியாகுமா என்பது கேள்வியே.

இலங்கை தொடர்பான இந்தியாவின் நீண்டகால வெளியுறவுக் கொள்ளைகையில் உடனடியாக மாற்றங்கள் ஏற்படும் என்று மதிப்பிடவும் முடியாது. இருந்தாலும் அதற்குரிய நகர்வுகளில் ஈடுபட வேண்டிய அவசியத்தைத் ஜெனீவாவில் இலங்கை வெளிப்படுத்திய கருத்துக்கள் காண்பிக்கின்றன. குறிப்பாக ஐ.நா மனித உரிமைச் சபை இலங்கைக்குப் பாடம் படிப்பிக்கத் தேவையில்லையென அமைச்சர் அலி சப்ரி ஜெனீவாவில் வெளிப்படுத்திய ஆவேசமான கருத்து இந்தியாவுக்குமான ஒரு எச்சரிக்கைதான்.

ஆகவே வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் இருக்கும் உள்ளக முரண்பாடுகளை ஊக்குவித்துப் பிளவுபடுத்தும் உத்திகளையும், இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு அமைவாகப் 13 ஐ ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் எனத் தமிழ்த் தரப்புக்கு நடத்தும் கட்டாய வகுப்புகளையும் இந்தியா நிறுத்த வேண்டிய நேரமிது. இந்தியா எவ்வளவுதான் அள்ளிக் கொடுத்தாலும், சிங்கள ஆட்சியாளர்கள் எவரும் இந்தியாவை நேரடியாகவே எதிர்ப்பார்கள் என்பதற்கு 1983 இல் இருந்து ஜெனீவா அமர்வு வரை உதாரணங்கள் இருக்கின்றன. மறுபுறம் தமிழர் தாயகப் பிரதேசங்களில் உள்ள அக முரண்பாடுகளை நன்கு பயன்படுத்திப் புதுடில்லி என்னதான் பிரித்தாளும் தந்திரங்களைக் கையாண்டாலும், இன்றுவரை இந்தியாவையே ஈழத்தமிழர்கள் நம்புகின்றனர்.

ரசியா உக்ரெய்னில் நடத்திய வாக்கெடுப்புக்குப் பின்னரான சூழலில்கூட ஜெனீவாவில் சிங்கள ஆட்சியாளர்களை ஆட்டம் காண வைத்திருக்க வேண்டிய இந்தியா, இலங்கை ஒற்றையாட்சியைப் பாதுகாக்கத் தன்னைத் தியாகம் செய்வதன் உள் நோக்கம் ஈழத்தமிழர்களுக்குப் புரியாததல்ல. ஆனால் அது பற்றி வெளிப்படையாகப் பேச இயலாத அரசியல் சில சிக்கல்கள் ஈழத்தமிழர்களுக்கு உண்டு. இருந்தாலும் ஈழத் தமிழ் நாகரிகம் அச் சிக்கல்களை நிதானமாகவே கையாளுகின்றது. ஆனாலும் புதுடில்லி புரிந்தும் புரியாதது போன்று இருக்கிறது என்பதே கசப்பாண உண்மை.

Share This

COMMENTS