மூன்றாம் பாலின பிரதிநிதிகளை உட்சேர்ப்பது தொடர்பில் ஜனாதிபதியோடு பேசுகிறேன் – வட மாகாண ஆளுநர்

வட மாகாணத்தில் இடம்பெறும் மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடல்களில் மூன்றாம் பாலினத்தின் பங்குபற்றலை உறுதிப்படுத்துவதற்கு ஜனாதிபதியுடன் கலந்துரையாடுகிறேன் என ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
யாழ். மத்திய கலாசார மண்டபத்தில் நேற்று (15) புதன்கிழமை இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின விசேட நிகழ்வில் மூன்றாம் பாலினத்தினர் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் வட மாகாண ஆளுநரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வட மாகாண மகளிர் விவகார அமைச்சும் இந்தியா தூதரகமும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின விழாவில் வட மாகாண ஆளுநர் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.
இதன்போது விழா மேடையில் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆளுநரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததோடு, மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.
அத்தோடு மூன்றாம் பாலினத்தவர்கள் பொது போக்குவரத்து, அரச அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை எடுத்துரைப்பதற்கு மூன்றாம் பாலினத்தவர்களின் பிரதிநிதிகளையும் மாவட்டத்தில் இடம்பெறும் அபிவிருத்தி கலந்துரையாடல்களில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.
இக்கோரிக்கைகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் ஆளுநரிடம் வினவியபோது,
மூன்றாம் பாலினத்தவர்களின் கோரிக்கை குறித்து கரிசனை கொண்டுள்ளேன். அவர்கள் தமக்கான கோரிக்கையை மட்டுமல்ல, இலங்கை முழுவதும் உள்ளவர்களின் பிரச்சினைகள் சார்ந்தும் அறிவித்துள்ளனர்.
மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடல்களில் தமது பிரதிநிதிகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை என்னிடம் முன்வைத்துள்ள நிலையில், இது தொடர்பாக ஜனாதிபதியுடன் பேசி தீர்மானம் ஒன்றை எட்ட முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.