அரசாங்கம் பெண்களின் பிரச்சினைகளை கண்டு கொள்வதில்லை: விடிவெள்ளி மகளிர் அமைப்பினர்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை தொடர்ந்து மலையகத்தில் வாழும் பெண்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக விடிவெள்ளி மகளிர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஹட்டனில் நேற்று (15.03.2023) நடந்த ஊடக சந்திப்பில் வைத்து இந்த விடயத்தினை தெரிவித்துள்ளனர்.
மேலும் தெரிவிக்கையில், நாட்டுக்காகவும் வீட்டுக்காகவும் ஓடாய் தேயும் பெண்களின் பிரச்சினைகள் தொடர்பாக எந்தவொரு அரசியல்வாதியோ அரசாங்கமோ கண்டு கொள்வதில்லை. எனவே பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
எமது அமைப்பானது 25 தோட்டங்களில் கடந்த மூன்று வருட காலமாக பெண்களின் உரிமைக்காகவும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்காகவும் செயப்பட்டு வருகின்றது.
மலையகத்தில் பெண்கள் எதிர்நோக்குகின்ற பல பிரச்சினைகள் தொடர்பாக சில கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைக்க நினைத்தே குறித்த ஊடக சந்திப்பினை ஏற்பாடு செய்துள்ளோம்.
குறிப்பாக பெருந்தோட்ட துறையிலே பணிபுரிகின்ற பெண்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை.
இந்நிலையில் வாழ்வதற்கான சம்பளம் சேம நலன்கள், தொழில் ரீதியாக பெற்றுக்கொடுக்க வேண்டிய கௌரவம் உள்ளிட்டவைகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் கொள்கைகளை வகுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.